நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் கரடிக்குட்டுப்பகுதி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான புளூ மெட்டல்ஸ் என்னும் கல்குவாரி (கிரசர்) செயல்பட்டுவருகிறது.
இது கரடிக்குட்டுப்பகுதியில் உள்ள பாறைகளை வெடிகள் கொண்டு உடைத்து அவற்றை ஒன்றரை, முக்கால், சிப்ஸ், மணல், தூசி போன்ற பொருள்களாகத் தயார் செய்கின்றனர்.
இங்கு இந்த குவாரி செயல்படுவதால் தூசி பறந்து அப்பகுதிகளில் வேளாண் நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களின் மீது படிந்துவிடுவதுடன் மகசூல் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் மக்கள் நெஞ்சு சளி, இருமல் போன்ற நோய்களால் அவதி அடைவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குவாரியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் அதிர்ந்து சுவர்கள் சேதம் ஏற்படுவதாகக் கூறி செங்குளம், தேவர் பேருந்து நிறுத்தம், புதுப்பட்டி கிராம பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கல்குவாரியை இயக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த நத்தம் வட்டாட்சியர் விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் ராஜமுரளி, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.
அப்போது சம்பந்தப்பட்ட கனிமவளத் துறை அலுவலரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை கிரசரை ஓட்டக் கூடாது என்றும் கல்குவாரி நிர்வாகத்திற்கு கூறியதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: 200 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்: மீட்பு நடவடிக்கை தீவிரம்