திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆய்வாளர் சண்முகலெட்சுமி, துணை ஆய்வாளர் பாலமுத்தையா, காவல்துறையினருடன் அந்த கிராமத்தில் விடிய விடிய சோதனை செய்தார்.
சந்தேகத்தின் பேரில் பள்ளப்பட்டி அருகேயுள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தஜோதி என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு மதுபான கடையில் விற்பது போலவே பெட்டி பெட்டியாக சுமார் 1,355 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
ஆனந்த ஜோதி தனது வீட்டில் ஒரே வரிசைஎண் கொண்ட பெட்டிகளை அடுக்கி வைத்திருந்ததால், அவரது செயலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், சில காவல்துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை செய்ய ஆனந்தஜோதியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற ஹோமியோபதி மருத்துவரின் பிணை மனு தள்ளுபடி!