திண்டுக்கல்: கோவையில் இருந்து தென்காசி நோக்கி பயணிகளுடன் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை அம்பிளிக்கை அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து தாராபுரம் வழியாக புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு லாரி சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ஆம்னி பேருந்து, சென்டர் மீடியன் மீது மோதி எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் பேருந்து மற்றும் லாரியின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது.
இச்சம்பவத்தில் ஆம்னி பேருந்து ஓட்டி வந்த தென்காசியைச் சேர்ந்த காளிதாசன் என்பவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 12 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சிலர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்திற்காக பணம்கேட்டு மிரட்டிய 18 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை!
இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற மினிவேன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியைக் கடக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதிய மினிவேன் அங்கிருந்த கடைக்குள் பாய்ந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சிவராஜ் மற்றும் அவரது தாய் காளியாத்தாள், மேலும், கடையில் இருந்த பழனிசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அதில் காளியம்மாள், ரவிச்சந்திரன், மற்றும் பழனிசாமி உயிரிழந்தனர்.
இதுபோன்ற கோர விபத்துகள் அம்பிளிக்கை பகுதியில் அரங்கேறுவதால் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை வருமா?.. வராதா? - எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!