திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதியில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் அரளி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அரளிப்பூ விவசாய சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பூவை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் பல இடங்களில் பூவை பறிக்காமல் விவசாயிகள் செடியிலேயே விட்டுவிடுகின்றனர்.
இந்நிலையில் அனைத்து அரளி பூ செடிகளிலும் பூ பறிக்கப்படாமல் உதிர்கின்றது. மேலும் நாள்தோறும் பூக்கும் பூ பறிக்கப்படாமல் செடியிலேயே கருகி காய்ந்துபோகின்றது. இதனிடையே செடிகளை காப்பாற்றப் போராடும் விவசாயிகள் அடுத்தடுத்து மொட்டுகள் தொடர்ந்து வருவதற்காகப் பூக்கும் அரளி பூவைப் பறித்து நிலங்களில் போட்டுவருகின்றனர்.
செடிகளைக் காப்பாற்றாமல் விட்டால் மீண்டும் செடிகள் முளைத்து பூப்பதற்கு ஆறு மாத காலம் ஆகும் என்பதால் தற்போது செடிகளை காப்பாற்ற விவசாயிகள் நாள்தோறும் போராடிவருகின்றனர்.
இது குறித்து விவசாயி வள்ளி கூறியதாவது:
பங்குனி மாதம் கோயில் திருவிழா, சித்திரைத் திருவிழா, மதுரை திருவிழா காலங்களில் அரளி பூவிற்கு கடும் கிராக்கி ஏற்படும். அதனால் இந்த வருடம் அதிக அளவு அரளி பயிரிடப்பட்டது.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் அரளி பூவை பறிக்கக்கூட ஆளில்லாமல் உள்ளது. பறிப்பதற்கே ஆள் இல்லாதபோது இதனை வாங்க யார் வருவார்கள்.
மேலும் இப்பூவை கால்நடைகள் உண்ணாது. இதனைக் கோயில்களில் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பூத்த மலர்களை விற்பதற்கு வழியின்றி நிலங்களில் போட்டுவருகிறோம். எப்போதும் திருவிழாக்காலங்களை நம்பியே பூ பயிரிடல் செய்வோம். ஆனால் இம்முறை ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு அரசு உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவ - மாணவிகள்