திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மேற்படிப்பை படிப்பதற்கு வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மேற்படிப்பை படிக்காமலேயே விட்டுவிடும் நிலை உள்ளது.
மாணவிகளுக்கு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அரசுக் கல்லூரி இருப்பதால், அவர்கள் மேற்படிப்பை தடையின்றி எளிதில் படித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடிகிறது. இந்நிலையில், ஒரு கல்லூரி வேண்டும் என்பதே பல ஆண்டுகளாக பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை உள்ளது.
இதனடிப்படையில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார், தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்றவுடன் கொடைக்கானலில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் நகர மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான முகமது இப்ராஹிம் ஆகியோர் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உரிய இடங்களைத் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் நிலம் எந்த பயன்பாடும் இன்றி ரைபிள்ரேன்ஞ் ரோடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யலாம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 2,405 பேருக்குக் கரோனா பாதிப்பு