தமிழக தேர்தல் களத்தில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெறுவது என்பது மிக கடினமான செயல். அதனை தக்க வைத்துக்கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. பலமுறை வெற்றி பெற்ற ஸ்டார் வேட்பாளர்கள் கூட, தொகுதி மாறியே தங்கள் வெற்றியை தக்க வைத்துள்ளனர். தமிழகத்தில் எந்த அலை வீசினாலும் எம்எல்ஏக்கள் வெற்றி பட்டியலில் இவரின் பெயர் கண்டிப்பாக இருக்கும்.
ஆம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவியை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் அர.சக்கரபாணி.
திண்டுக்கல் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்த சக்கரபாணி, 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் களம் இறங்கினார். அதிமுகவுக்கு எதிரான அலை வீசிய அந்த தேர்தலில், சுமார் 36, 823 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றிக்கணக்கை தொடங்கினார் சக்கரபாணி.
இதனைத்தொடர்ந்து, 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை வீசியபோதும் கூட, அதே ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு 1,369 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சக்கரபாணி.
பின்னர் 2006 தேர்தலில் 19, 903 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், 2006 முதல் 2011 வரை அரசு கொறடாவாக பொறுப்பு வகித்தார். 2011 தேர்தலில் 14,933 வாக்கு வித்தியாசத்திலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 65,727 வாக்குகள் வித்தியாசத்திலும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமல்ல 1998, 1999, 2004, 2009 உள்ளிட்ட மக்களவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ், தமாகா வேட்பாளர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதலிடத்தைப் பெற இவரே முக்கிய காரணம்.
சக்கரபாணி போல் எம்எல்ஏக்கள் இருந்தால் எப்போதும் திமுக ஆளும்கட்சிதான் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பாராட்டியுள்ளனர். தற்போது ஒட்டன்சத்திரம் தொகுதியில் 6 வது முறையாக தனது வெற்றியை சக்கரபாணி பதிவு செய்து கோட்டைக்குள் நுழைகிறார்.