திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காய்கறி சந்தைதான். இந்தச் சந்தை தென் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இந்தக் காய்கறி சந்தைக்கு எதிரிலேயே நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சென்னை, கரூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.
அதேபோல் காய்கறி சந்தைக்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தைக்கும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வாகன நெரிசலைக் கருத்தில்கொண்டு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோதனைச்சாவடி அருகேயுள்ள வேளாண் விளைபொருள் பேரங்காடி உள்ள இடத்திற்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது.
ஆனால், இந்த புதிய சந்தைக்கு வெறும் 20 காய்கறி கமிஷன் கடைகள் மட்டுமே வந்தன. மீதமுள்ள 100க்கும் மேற்பட்ட கமிஷன் கடைகள் பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் காய்கறிகளை ஏற்ற வரும் லாரிகள் மார்க்கெட்டில் லாரிகளை நிறுத்தி லோடு ஏற்றாமல் எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்குள் லாரியை நிறுத்தி இரவு 8 மணிக்கு மேல் லோடு ஏற்றுகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை விட காய்கறி லோடு ஏற்றும் வாகனங்களே அதிகளவில் உள்ளன. மேலும் லாரிகளை அதிவேகமாகவும் பயணிகளுக்கு இடையூறாகவும் இயக்குகின்றனர். இதனால் பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவு நேரங்களில் மார்க்கெட்டாக மாறிவரும் பேருந்து நிலையத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செண்டு மல்லிப் பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை