திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநாடு இன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அரசு பள்ளிகளை மூடுவதால் இனி இலவச கல்விக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகும்.
அரசுப் பள்ளிகளை மூடுவதால் பட்டியலின, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியின ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கும். மத்திய பாஜக அரசு திட்ட கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக்கை கொண்டு வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மூட அரசு முயற்சிக்கிறது. அதேபோல் புதிய கல்விக் கொள்கையில் 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது, அரசுப் பள்ளிகள் இல்லையென்றால் இலவசக் கல்வி என்ற ஒன்றே இருக்காது.
தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்கிடுமா? ஆதலால் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு அரசு பள்ளியை மேம்படுத்தி செயலாற்ற செய்திட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ