திண்டுக்கல்லில் புதிதாக மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்கல்லூரியின் முதல்வராகவும், தனி அலுவலராகவுமாக டாக்டர் கே.கே. விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அவர், இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனது முதல்வர் மற்றும் தனி அலுவலர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”அரசால் தேர்வு செய்யப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை வருவாய் துறை அலுவலர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். அந்த இடத்தை இன்று ஆய்வு செய்யவுள்ளோம். முதலில் மருத்துவக் கல்லூரியும், அதனைத்தொடர்ந்து மருத்துவமனையும் கட்டப்படவுள்ளது.
அதுவரை அரசுத் தலைமை மருத்துவமனையில் அலுவலகம் செயல்படும். புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 60 விழுக்காடு நிதி மத்திய அரசும், 40 விழுக்காடு நிதி மாநில அரசும் வழங்குகிறது. இதற்காக அரசு 349 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதியில் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார் “ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!