திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில், பாலராஜக்காபட்டி கிராமம் அமைந்துள்ளது. நேற்று மாலை இக்கிராமத்தின் முன்பே செல்லும் குடகனாறு ஆறு பாலத்தின் அடியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு சிலர் பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் துணிப்பையில் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், தொட்டில் குழந்தை திட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் கூறுகையில், ' தொடர்ந்து நான்கு நாட்களுக்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்னர் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும். அதுவரை தொட்டில் குழந்தைத் திட்ட அலுவலர்கள் குழந்தையை கவனித்துக் கொள்வோம்' என்று கூறினர்.
பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து தாடிக்கொம்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சென்ற வாரம் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 தலை, மூன்று கைகளுடன் பிறந்த வினோத குழந்தை.!