திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சந்திரன். இவர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேலம்பட்டி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக பாலகிருஷ்ணன் மனைவி மலர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் சந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான ஆனந்தன், சுகுமாரி, வாசுகி மற்றும் ஆனந்தனின் மகள் பிரியதர்ஷினி ஆகியோரை அடிக்கடி தகாத வார்த்தைகளால் பேசியும் பல வன்முறைசம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட ஆனந்தனை பலமாகத் தாக்கியதில் கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நத்தம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தபோது நத்தம் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்தது மட்டுமில்லாமல் புகார் அளிக்க வந்த ஆனந்தன் மற்றும் அவர்கள் உறவினர் மீது வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆனந்தனின் தம்பி பாலகிருஷ்ணன் மகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட 6 பேர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக தாக்குதலை நடத்திய சந்திரனை கைது செய்யக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள உறவினர்களை விடுவிக்கக் கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து உரிய நடவடிக்கைகள் எடுத்துத் தரப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: 'புஷ்பா' திரைப்படத்தில் தமிழர்களை இழிவுபடுத்திய அல்லு அர்ஜூன்?