திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீட்டை சேர்ந்தவர் செல்லப்பா(62). இவர் நத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலத்தின் மைத்துனர் ஆவார்.
சேர்வீடு கிராம திருவிழாவையொட்டி நேற்று இரவில் கச்சேரி நடைபெற்றதால் ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டுள்ளனர். அந்த வேலையில் தோட்டத்து வீட்டில் வைத்து மர்ம நபர்கள் செல்லப்பாவை தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். கச்சேரி முடிந்து அதிகாலையில் செல்லப்பாவின் தோட்டத்து வீடு வழியாக சென்ற மக்கள், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லப்பாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தகவல் நத்தம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் போலீசார் அவரது பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் டி.எஸ்.பி. சுகாசினி சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.