திண்டுக்கல்: வத்தலக்குண்டு ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜீதீன் (30). இவர் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் தங்கி கட்டட காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வெள்ளக்கிணறு, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டடப்பணிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் (நவ.30) அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற 15 பேர் கொண்ட மர்ம கும்பல் தாஜீதீனை கட்டிப்போட்டு இரும்புக்கம்பி, அரிவாள், கத்தி, வயர், பிளாஸ்டிக்குழாய் பயங்கர ஆயுதங்களால் உடல் முழுவதும் கடுமையாக தாக்கி, லைட்டரால் சூடு வைத்தும் இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வத்தலக்குண்டில் உள்ள தாஜ்தீனின் தந்தை மற்றும் மனைவிக்கு போன் செய்து தாஜ்தீனை இரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர். விடிவதற்குள் உடனடியாக 5 லட்சம் பணம் கொண்டு வந்தால் தான் அவரை உயிருடன் விடுவோம் இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாஜுதினின் தந்தை அப்துல்லா தனது வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அக்கும்பல் தாஜுதீன் அணிந்திருந்த மோதிரம் உட்பட 4 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாயை பறித்துவிட்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு தந்தை அப்துல்லா வரும் வரை பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர்.
கடைசியாக சூளூர் பகுதியில் ஓரிடத்தில் அப்துல்லாவிடம் ரூ.2 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு தாஜுதீனை இறக்கி விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. இரத்த வெள்ளத்திலிருந்த தாஜுதீனை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடல் முழுவதும் பலத்த உள்காயம் என்பதால் மேல்சிகிச்சைக்காக தற்போது தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து விசாரித்த வத்தலக்குண்டு காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர்.
கோவையில் பணத்திற்காக கட்டட ஒப்பந்ததாரரை அவரது அறைக்கே சென்று அடைத்து வைத்து விடிய விடிய கொடுமைப்படுத்திய மர்ம கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையின் முக்கிய வீதியில் கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய கும்பல்