திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களது வலிகள் குறித்து எத்தனை முறை பேசப்பட்டாலும், அதற்கான தீர்வை இன்னும் சமூகம் எட்டவில்லை என்பதே நிதர்சனம். தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், தரக்குறைவான விமர்சனங்கள், தொடர் புறக்கணிப்புகளைத் தாண்டி பல துறைகளில் தங்களை சிறந்த ஆளுமைகளாக முன்னிறுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதியும் தனது எழுத்தாற்றல் மூலம் இணைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை குணவதி ‘என் பெண்மை விற்பனைக்கு அல்ல’ என்ற நூலை எழுதியுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய மகப்பேறு மருத்துவர் அமலாதேவி, இன்றைய சூழலில் இத்தனை வளர்ச்சி பெற்ற போதிலும், பெண்களே சபையினில் பேசத் தயங்கும் விஷயங்களை, திருநங்கை குணவதி மிக எளிமையான கருத்துக்களின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளார். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள அசாதாரண துணிச்சல் வேண்டும். சமூகத்தின் அத்தனை புறக்கணிப்புகளையும் மீறி நாங்கள் மூன்றாம் இனம் அல்ல, நாங்களும் பெண்களே என்று கூறும் மன உறுதி குணவதிக்கே உரியது என்று கூறினார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரான்சில் இருந்து வந்த ஜெகதீஸ்வரி கூறுகையில், திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் ஏமாற்றங்கள் குறித்து கவிதை வடிவில் விளக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள ஒவ்வொரு வரிகளும் அவர்கள் கடந்து வந்த பாதைகளில், அவர்கள் கண்ட அத்தனை சவால்களையும் விவரிக்கும் விதமாக உள்ளது. திருநங்கைகள் கைதட்டி காசு கேட்பவர்கள் அல்ல. அவர்கள் சாதனைகளின் மூலம் கைதட்டுகளை பெற வேண்டியவர்கள். முதலில் நாம் அனைவரும் திருநங்கைகளை சம உயிராக கருதவேண்டும். அவர்களை காயப்படுத்துவது, கேலி செய்வது போன்ற விஷயங்களை செய்திடாமல், ஒரு சக உயிராக கருதி தோழமையுடன் பழகவேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் நிகழும் என்றார்.
இதையும் படிங்க:'தவிக்கும் வாய் அறியும் தண்ணீரின் தேவையை...'