திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம் என அரசு அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் மெல்ல வரத்தொடங்கியுள்ளனர்.
இதமான கொடைக்கானல் சூழ்நிலையை ரசிக்க வருபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள், இளைஞர்கள் சிலர் போதை பொருள்களை பயன்படுத்துவதற்காகவே கொடைக்கானல் வருகின்றனர். கஞ்சா, போதைக் காளன் போன்றவற்றை விற்பனை செய்யும் கும்பல், மாணவர்களை மூளைச் சலவை செய்து அவர்களை போதைக்கு அடிமையாக்குவதோடு போதை பொருள் விற்பனையில் ஈடுபடுத்திவருகிறது.
மேலும், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதலங்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை சமீபகாலமாக கொடைக்கானல் பகுதியில் அதிகரித்துள்ளது. கொரியர் மூலம் போதைப் பொருள் அனுப்பப்படும் என்கிற அளவுக்கு வெளிப்படையாக போதை காளான்களை சமூகவலைதளங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். போதை காளான்களை உட்கொண்டு இளைஞர்கள் சிலர் உயிரிழந்த சம்பவமும் கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடிவதில்லை. இருப்பினும், காவல்துறையினர் கூடுதல் சிரத்தை எடுத்து போதைப் பொருள் விற்பனை செய்வோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கொடைக்கானல் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
"ஊரடங்கினால், வாழ்வாதரத்தை இழந்த இளைஞர்கள் சிலர், இந்த போதைக் காளான்களை விற்பனை செய்யத்தொடங்கியுள்ளனர். போதைக்காளான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்றுகூட வீடியோ வெளியிடுகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையாகின்றனர். காவல்துறை மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கிறார் சமூக ஆர்வலர் வீரா.
கொடைக்கானலில் போதை காளான், கஞ்சா ஆகிய போதை பொருட்கள் ஆன்லைனில் விற்க்கபடுவது அதிகரித்து வருவது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா அவர்களிடம் கேட்டபோது,ஆன்லைனில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் உள்ளூர் காவல்துறையிடம் சோதனைகளை அதிகப்படுத்தக் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர் கைது