திண்டுக்கல்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தங்களால் முடிந்த சேவையை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முஜிப் பிரியாணி கடை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள முஜிப் பிரியாணி கடையின் உரிமையாளர்களான முஜிப்புர் ரகுமான், அவரது சகோதரர் பிலால் ஹூசைன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது வறியவர்களைத் தேடிச் சென்று உணவு அளித்து வந்தனர். தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தங்களது கடையின் முன்பு மதியம், இரவு என இரண்டு வேளைக்கான சுமார் 150 உணவுப் பொட்டலங்களை தினந்தோறும் வைத்து வருகின்றனர்.
இதனை பசியுடன் இருப்பவர்கள் விலையில்லாமல் எடுத்துச் சென்று பசியறலாம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளனர். முஜிப் பிரியாணி கடை உரிமையாளர்களின் இந்த செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே உரிமையாளர்கள் 10 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பிரியாணியை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு பிரியாணி பரிசு: அசத்திய உணவக உரிமையாளர்!