திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. தொடர்ந்து இங்கு கேரட், பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவற்றை உழவர்கள் அதிக அளவில் வேளாண்மை செய்துவருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் பொருள்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் வெள்ளைப்பூண்டு வேளாண்மை அதிகம் செய்துவருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டு தேனி மாவட்டம் வடுகப்பட்டிக்கு அனுப்பப்படும்.
இவ்வாறாக அனுப்பப்படுவதால் போதிய பயனில்லை என உழவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி அதை வருவாய் கோட்டாசியர் முருகேசனிடம் உழவர்கள் அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளாவன:
- கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டும்,
- அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,
- ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்
இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் அவ்வப்போது மழை: வெள்ளைப்பூண்டு வேளாண்மை பாதிப்பு