நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சமையலுக்குத் தேவையான காய்கறிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி பல இடங்களில் காய்கறி பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும் அப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் அதிகமாக கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் ஐந்து நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் இயக்கப்படுகிறது.
சுகாதார முறையில் கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள் இந்த வாகனங்களின் மூலம் நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் குறைவதோடு பொதுமக்களின் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படுகிறது என்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.