திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்டப் பணியில் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆழியாரில் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீருக்காக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
விவசாயிகளிடம் பேசி சமாதானப்படுத்தி தண்ணீர் எடுக்கப்படும். அவர்களது முக்கியமான கோரிக்கை கேரளாவில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பெற்றுத் தந்து விட்டு எடுத்துக் கொள்ளலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் எதுவும் செய்ய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை அணையில் இருந்து நேரடியாக திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்காக ரூ. 543 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், நத்தம், தாடிக்கொம்பு, வடமதுரை, எரியோடு, அரியலூர் மற்றும் பாளையம் ஆகியப்பகுதிகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்த ரூ. 133 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாஜக நிதி கொடுத்த வாங்கிங்க... எங்களுக்காக வந்து வேலைபாருங்க' - குஜராத்தில் பாஜகவினருக்கு அழைப்புவிடுத்த கெஜ்ரிவால்