தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், "சென்னையில் கரோனா தொற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது எனக்கு லேசாக கால்வலி ஏற்பட்டது. அதுகுறித்து அமைச்சா் விஜயபாஸ்கரிடம் தெரிவித்தபோது அவா் கரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினார்.
பின் பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று 48 நாள்கள் கழித்து தற்போது ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.
மாவட்டத்தில் உள்ள மக்கள் கரோனா தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக கரோனா சோதனை செய்து கொள்ளவேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 791 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 683 நபர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 64 பேர், வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட 37 பேர் என 101 நபர்கள் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 32, 420 ஆகும்.
தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரூர் சார் ஆட்சியர் பிரதாப், அரூர் சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தொடர் மழை எதிரொலி: இரவுக்குள் தமிழ்நாடு வரும் காவிரி நீர்!