நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 1337 பேரும், தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 263 பேரும் நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலமான பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர். இவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற பொருள்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. அதுமட்டுமின்றி இவர்களுக்கான பயணக்கட்டணம், சமையலுக்கு தேவையான கோதுமை, மைதா போன்ற உணவுப் பொருட்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டீ கடைகளுக்கு சீல்