திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள செயின்ட்மேரிஸ் சாலையில், பாதரச தொழிற்சாலை கடந்த 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
இதனையடுத்து, ஆலையில் கலந்துள்ள பாதரச கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் அங்கு பணிபுரிந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்டோருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், அங்கு பணிபுரிந்த பலருக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது
இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற நிர்வாகம் முடிவு செய்து, இதற்காக அப்பகுதியிலுள்ள சுமார் 460 மரங்களை அகற்ற முறையான அனுமதி பெற்று தற்போது வெட்டி வருகிறது.
இச்சூழலில், அதிலுள்ள இலைகளிலும் பாதரச கழிவுகள் கலந்திருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இவற்றை நிபுணர் குழுவை அமைத்து முறைப்படி அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் தொழிற்சாலையிலிருந்து வரும் மழை நீரிலும் பாதரச கழிவுகள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. அவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பதவி உயர்வு வேண்டும் - இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்