தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்திய நாராயணன் தலைமை தாங்கினார்.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயணன், "மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் நீண்ட நாட்களாக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஊழியர்களின் அடிப்படை உரிமையான எட்டு மணி நேரம் வேலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே அது. ஆனால் அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காமல் தட்டிக் கழித்துவருகிறது.
தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்த்து அனைத்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் கூட்டாக வழக்குத் தொடர்ந்துள்ளன. நிலுவையில் உள்ள இவ்வழக்கை ஏற்று நடத்த வேண்டிய தமிழ்நாடு அரசோ மெத்தனமாக உள்ளது. மருந்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 2016ஆம் ஆண்டுக்குப்பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துப் பொருட்களுக்கு அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, நம் நாட்டிற்குச் செய்த துக்ககரமான செயலாகும். மருந்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து. மேலும், மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணை போவதிலேயே குறியாக உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!