திண்டுக்கல் 34ஆவது வார்டு அண்ணா காலனியில் 34 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுக்கணக்கில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அரசியல் கட்சியினர், அலுவலர்களிடம் வலியுறுத்தியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அண்ணா காலனியில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் கிழக்கு தாலுகா அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் மரியா ஜான்சன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுகந்தியிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து துணை வட்டாட்சியர் சுகந்தி கூறுகையில், 1986ஆம் ஆண்டு புறம்போக்கு இடம் குடியிருக்க கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான முகாந்திரம் எதுவும் அரசு ஏடுகளில் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும். அப்போது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டா வழங்க சாத்தியமிருந்தால் இதுதொடர்பான அறிக்கை வருவாய் கோட்டாட்சியரிடம் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.