திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் கொலை நடந்த வண்ணம் இருப்பதால், அந்நகரமே கொலை நகரமாக மாறி வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள தங்கும் விடுதி அருகே சமீபத்தில் இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
அதற்கு அடுத்த நாளே குட்டியபட்டி பகுதியில் இப்ராகிம் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பிறகு செட்டியபட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வெட்டி ரயில் முன் வீசினர்.
நேற்று (செப் 22) நிர்மலா தேவியையும், கூலித்தொழிலாளி ஸ்டீபன் ராஜையும் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட ஸ்டீபனும், தற்போது சட்டவிரோத மதுபானங்கள் விற்பனையில் கைது செய்யப்பட்ட அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் இன்பராஜும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இணைந்து மதுபானங்களை விற்பனை செய்துவந்தனர்.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தொழில் செய்ததாக ஸ்டீபன் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதனால் இன்பராஜ் கூலிப்படையை ஏவி ஸ்டீபனை கொலை செய்தாரா? அல்லது ஸ்டீபன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், வேறு யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் நகரப் பகுதியில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதனால் பொதுமக்கள் வேலைகளுக்குச் செல்வதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் அச்சப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து மக்களை காக்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 வயது சிறுவன் உயிரிழப்பு