திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சியில் குஜிலியம்பாறை அருகே செயல்பட்டு வரும் தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான கல் குவாரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், கல் குவாரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். பின்னர் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 28 முதல் 30 வயது இருக்கலாம் என்றும், இளைஞர் ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லைக் கட்டி குவாரியில் வீசப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இளைஞரின் ஆடையில் 'ராம் பாய்ஸ் கபடி குழு, காங்கேயம்' என்று எழுதப்பட்டிருந்ததால், அவர் கபடி வீரராக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த தனியார் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது என்றும், தற்போது இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட கல் குவாரியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு இளம்பெண் உள்பட 3 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'காவலரிடமே கைவரிசையா'... காவல் துறை வாகனத்தை திருடியவர் கைது!