திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் அருகே பழனிச்சாமி என்பவரின் மகன்களான நாட்ராயன், அவரது தம்பி அழகினன் (எ) அழகர்சாமி இருவரும் வசித்துவருகின்றனர். பழனிச்சாமி தன் வாழ்நாளில் இறுதி தருணத்தில் அவருடைய சொத்தை மகன்களுக்கு பிரித்துகொடுத்தார். இதன்படி, மூன்று ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் 30 செண்ட், வீடு ஆகியவை மூத்த மகன் நாட்ராயனுக்கும், ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை இளைய மகன் அழகர்சாமிக்கும் எழுதிகொடுத்தார்.
வாடகை வீட்டில் வசித்து வந்த அழகர்சாமி சொந்த வீடு கட்ட முடிவுசெய்தார். இதையடுத்து தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அழகர்சாமியின் தங்கைகள் செல்வி (எ) பழனியம்மாள், அம்சவள்ளி இருவரும் இணைந்து நாட்ராயனிடம் இது குறித்து தெரிவித்தாகக் கூறப்படுகிறது. தங்கைகளின் தூண்டுதலில் அண்ணன் நாட்ராயன் அழகர்சாமியிடம் பேச முயன்றுள்ளார். இந்த பேச்சு வார்த்தை முற்றவே அடிதடியில் முடிந்தது.
நாட்ராயன் பேசியதில் ஆத்திரமடைந்த அழகர்சாமி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணனின் கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த நாட்ராயன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சொத்து பிரச்னையில் சொந்த அண்ணனை வெட்டிய அழகர்சாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: வன்முறையைத் தூண்டும் டிக் டாக் பதிவு: இருவர் கைது