திண்டுக்கல் - தாமரைப்பாடியிலுள்ள அரசு மதுபானக் கிடங்கிலிருந்து மதுபானங்கள் ஏற்றப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு மதுபானக்கடைகளுக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு அரசு மதுபானக்கடைகளுக்கு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்து கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டியருகே தலை குப்புற கவிழ்ந்தது.
இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் சாலையில் கொட்டின. அப்போது, அருகே இருந்த பொதுமக்கள், மதுப்பிரியர்கள் மதுபானங்களை அள்ளிச் செல்வதற்கு ஓடிவந்தனர். ஆனால், லாரியில் வந்த இரண்டு நபர்கள் படுகாயத்துடன் உயிரைக் காப்பாற்றக் கூறி, அலறியபோது அவர்களைக் காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் மக்கள் மதுபானங்களை அள்ளிச்செல்வதிலேயே குறியாக இருந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் காயமடைந்த இருவரை மீட்டு, சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலையூரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு!