திண்டுக்கல்: திண்டுக்கல் பயணியர் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து போராடி வருகிறோம். மேலும், மதுவிலக்குத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
அந்தப் போராட்டத்தின் விளைவு தமிழகத்தில் 4,000 மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இருப்பினும், தற்போது மூடப்பட்ட மதுக்கூடங்கள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன. மூத்த அமைச்சர்கள் இருக்கும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் இச்செயல்கள் பின்னாளில் சட்டப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளாக உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமான பார்கள் மட்டுமல்ல, மணல் அள்ளுவது, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது போன்றவை தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஆத்தூர் மற்றும் பழனி தொகுதியில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் இருக்கும் தொகுதிகளில்தான் சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடக்கின்றது.
இயற்கை வளங்களான மணல், நீர் நிலைகள் ஆகியவற்றை கொள்ளையடிப்பது, 24 மணி நேரம் இயங்கி வரும் மதுக் கூடங்களையும் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்த உள்ளோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், அதற்கான முதல் கையெழுத்திடுவோம் என்றும் தெரிவித்தனர். ஆனால், அதனை செய்ய முடியவில்லை.
தற்போது வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சனாதனம் என்பதை திமுக கையில் எடுத்துள்ளது. அரசியல் சாசனத்தில் சமுதாய உயர்வு - தாழ்வு பாகுபாடு, மத, மொழி பகுதி வேறுபாடுகள் என குறிப்பிடப்படவில்லை. மதம் என்பது தனிமனித விருப்பு, வெறுப்பு, வழிபாடு, தனி உரிமை அதில் அரசியல் சாசனம் தலையிடாது.
உதயநிதி ஸ்டாலின் கொசுவை ஒழிப்பதுபோல சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியது எதார்த்தம் அல்ல, திட்டமிட்டுதான் பேசியுள்ளார். சனாதனம் பற்றிய விளக்கம் வரலாறு, பாகுபாடு தீங்கு குறித்து சொல்லாமல் ஒழித்துக் காட்டுவோம் என்பதுதான் உதயநிதியின் பேச்சு.
எதற்கு சுற்றி வளைத்து பேசுவது, நேரடியாக இந்துக்களை ஒழிப்போம். தமிழகம், இந்தியா, உலகத்தில் வாழும் இந்துக்களை ஒழித்துக் கட்டுவோம் என சொல்ல வேண்டியதுதானே. இந்துக்களை ஒழிப்பதற்கு எந்த விதமான ஆயுதத்தை எடுத்துக் கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.
சாதி, மத வேறுபாடுகளை ஏற்க மாட்டோம் என சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வகுப்புவாத பேச்சுக்களை பேசுவது சரியானது அல்ல. சாதிகளை ஒழிப்பது அவர்களது நோக்கமல்ல. முழுவதும் களவாணித்தனம்தான். தைரியம் இருந்தால் சனாதனம், வாரணாசிரம் மக்களை வேறுபடுத்துகிறது எனக்கூறி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி இந்துக்களில் இருந்து வெளியேறுகிறார்களா? நாங்கள் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்றால், நீங்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
மேலும், சனாதனத்தில் மனிதனை வேறுபடுத்தி காட்டுவது என எந்த ஆதாரத்தை வைத்து பேசுகிறார்? பொது மேடையில் சனாதனம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க தயாரா? விவாதத்தில் தோற்று விட்டால் ஆட்சியை கலைக்கத் தயாரா” என கூறினார்.
இதையும் படிங்க: "ஒரு நாள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா போவோம் என சொன்னார்" - நடிகர் மாரிமுத்துவின் நண்பர் வருத்தம்!