மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொடைக்கானல். இதன் வனப்பகுதி 66 ஆயிரம் சதுர ஹெக்டேர் ஆகும். இதில் 5 ஆயிரம் ஹெக்டேர் புல்வெளியாகவும், 2,300 ஹெக்டேர் சோலைகளாகவும், 6 ஆயிரம் ஹெக்டேர் அளவில் வாட்டில், பைன், குங்கிலியம் போன்ற 14 வகை அந்நிய மர வகைகள் ஆக்கிரமித்து உள்ளன.
பெரும்பாலும் இந்த அந்நிய மர வகைகளான வாட்டில், பைன், குங்கிலியம் போன்றச் செடிகள் மற்றும் மரங்கள் எந்தப் பராமரிப்பும் இல்லாமல், வேகமாக வளர்ந்து விடும் தன்மை கொண்டது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைவது மட்டுமின்றி, சுற்றுச்சுழலும் பாதிப்படைக்கிறது. இந்நிலையில், நிலத்தின் நீர் வளத்தை காத்திட அந்நிய மரங்களை அழிக்கக்கோரி தமிழ் நாடு அரசுக்கும், வனத்துறைக்கும் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அந்நியச் செடிகள், மரங்களை அகற்றி, நம் நாட்டு பாரம்பரிய மரங்கள் மற்றும் புல்வெளிகளை உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த வகை அந்நிய மரங்கள், செடிகளால் புல்வெளி அழிந்து விடுவதால், வனவிலங்குகள் உணவுத் தேடி நகர் பகுதிக்கு அடிக்கடி இடம் பெயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடியிருப்புப் பகுதிகளிலும் வனவிலங்குகள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் சுற்றுலாத்தலத்தில் பயன்பாடற்று கிடக்கும் இ-டாய்லெட் கழிப்பறைகள்