திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்குட்பட்ட பெரம்புக்கானல் வனக்காப்பாளராக அழகேசன் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இதனிடையே கடந்த 30ஆம் தேதி விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதால் வன உயிரினங்கள் பலியாவதைத் தடுக்க, கொடைக்கானல் வனச்சரக அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேத்துப்பாறை பகுதியில் நடந்த இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கொடைக்கானல் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் மகேந்திரன் பங்கேற்றார். அப்போது வனக்காப்பாளர் அழகேசனுடன் மகேந்திரன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி அழகேசன் பெருமாள் மலை புனித வளனார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மகேந்திரன் தகராறு செய்துள்ளார். மேலும் அழகேசனைப் பணி செய்ய விடாமல் தடுத்து, அவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.
அழகேசன் இது பற்றி கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடைக்கானல் போலீசார், வனக்காப்பாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, சாதியை சொல்லித் திட்டிய குற்றத்திற்காக, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மகேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தாய், மகனுடன் தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்.. திருச்சியில் நடந்தது என்ன?