திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 25ஆம் தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வழிகளில் மீட்க முயற்சித்தும், குழந்தையை மீட்க முடியாத நிலையில் 88 அடிக்கு கீழுள்ள சுஜித்தை காக்க மாற்று வழியாக அருகிலேயே துளையிட்டு மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சுஜித் மீண்டு வர வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் சமய பேதமின்றி சிறப்பு பிரார்த்தனையில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் குழந்தைகள் உள்பட பலரும் கலந்துகொண்டு சுர்ஜித் மீண்டுவரவேண்டி தொழுதனர்.
இதையும் படிங்க: நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி!