திண்டுக்கல்: கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் சினிமா படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முறையாக நகராட்சி மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், இன்று (ஜூன் 03) கொடைக்கானல் அருகேவுள்ள நட்சத்திர ஏரியில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து நகராட்சி அலுவலர்களுக்கு புகார் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி அலுவலர்கள் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது. இதில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக சினிமாவிற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதியின்றி படப்பிடிப்பு செய்ததற்காக 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
தொடர்ந்து முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என சினிமா படக்குழுவினருக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்றும் அதனைக்கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கொடூரம்: கொதிக்கும் நீரை யாசகர்கள் மீது ஊற்றி கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர்!