நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானல் முழுவதும் கடைகளை அடைத்து அரசுக்குத் தங்களின் எதிர்ப்பை கொடைக்கானல் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று(ஏப்.22) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலகுண்டு பிரதான சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் நடந்த இப்போராட்டத்தில் கஞ்சி காய்த்தும், பிச்சை எடுத்தும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வியாபாரிகள் அரசுக்கு வலியுறுத்தினர்.
இதையடுத்து, காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் பிரச்னையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவதாக உறுதி அளித்தனர்.
இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.