திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த 24ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமாகியது. கோடை விழாவில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், படகு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக இந்த ஆண்டு ஆறு நாள்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது.
மலர் கண்காட்சியில் பல வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து சென்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்தார்.
கடந்த 10 நாள்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்த்து சென்றுள்ளனர். இந்த நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நடைபெற்ற இந்தக் கோடை விழா சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ள உள்ளூர்வாசிகள் இடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு