திண்டுக்கல்: கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, மூன்று பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
உடனடியாக கண்ணூர் காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 19ஆம் தேதி தனது கணவருடன் பழனிக்கு சென்றதாகவும், பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று போது, கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்ட நிலையில், மூன்று பேர் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.
இரவு முழுவதும் கொடுமை
பின்னர் தன்னைத் தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், காலையில் தங்கும் அறையில் இருந்து தப்பி வந்து கணவரிடம் நடந்ததை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரை வாங்க மறுத்த காவல்துறை
இதுதொடர்பாக புகார் அளிக்க பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விரட்டியடித்ததாகவும், அதனால், வேறுவழியின்றி சொந்த ஊர் திரும்பியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். ஆனால் இதனை பழனி காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.
தீவிர விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விடுதி உரிமையாளர்கள், பணியாளர்களை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள டிஜிபி அனில்காந்த் கடிதம்
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கேரள டிஜிபி அனில்காந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: தொழிலதிபரைக் கடத்திய குற்றச்சாட்டில் காவலர்களுக்கு வலைவீச்சு