திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ளது கீழ்மலைப் பகுதி. இங்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக இங்கு பெய்த தொடர்மழை காரணமாக அப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக, கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு மலைக்கிராமங்களிலும், குறிப்பாக கே.சி.பட்டி அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைக் கடந்து செல்லும் ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .
இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடப்பதற்காக இருபுறங்களிலும் கம்பிகளைக் கட்டி, அதனைப் பிடித்தவாறு ஆற்றை கடந்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான நிலையில் குழந்தைகள் உள்பட அனைவரும் ஆற்றைக் கடந்துவருகின்றனர்.
கள்ளக்கிணறு பகுதியைக் கடக்க பாலம் கட்டித்தருமாறு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு அப்பகுதியில் எடுக்காமல் உள்ளது.
இந்நிலையில், குறைந்தபட்சம் ஆற்றைக் கடந்து செல்லவதற்காவது தற்காலிகமாக தங்களுக்கு பாலம் ஏற்படுத்தித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சோத்துப்பாறை அணையில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் இளைஞர்கள்!