திண்டுக்கல்: சுறுசுறுப்பிற்கு பெயர் பெற்ற தேனீக்கள் மகரந்த சேர்க்கையின் மூலம் விவசாயிகளுக்கும், தேன் சேகரிப்பின் மூலம் பொதுமக்களுக்கும் அரும்பணியாற்றி வருகிறது. மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இயற்கையான தேன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ’தேன்’ என்ற பெயரில் சர்க்கரை கரைசலை விற்கும் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இயற்கையான முறையில் சேகரிக்கப்படும் தேனுக்கு அதிக தேவை உள்ளது. இதை அறிந்துகொண்டு பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்து செட் பகுதியில் தனியார் தோட்டத்தில் தேனீக்கள் வளர்ப்புப் பண்ணையை இசாக் என்பவர் நடத்தி வருகிறார்.
உரிமையாளர் இசாக் என்பவரின் எட்டு வயது மகன் தனது தந்தைக்கு உதவியாக தானும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனது உடல் முழுவதும் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பண்ணை நிர்வாகி இசாக் கூறியதாவது, ’தேனீக்கள் 5 வகைப்படும். மலைத்தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலி தேனீ, இந்தியத் தேனீ, கொசுத் தேனீ போன்றவை ஆகும். இவைகளில் கொசுத்தேனீக்களால் சேகரிப்படும் தேன்களுக்கு மவுசு அதிகம். ஒருகிலோ தேன் 6ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.
மகரந்த சேர்க்கைக்கும், மகசூல் அதிகரிப்பிற்கும் தேனீக்கள் மிக அத்தியாவசியமானவை. இதனால் சீசனுக்கு தகுந்தமாதிரி சூரியகாந்தி, எள், முருங்கை, மல்லி, தென்னை, பாகற்காய் மற்றும் கொடிகளில் வளரும் காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் செடிகளின் பூக்களில் தேனீக்களை கொண்டுவரச்செய்து மகரந்த சேர்க்கை நடக்கிறது.
தற்போது விவசாயிகளிடம் இதுதொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பூக்கள் நிரம்பியிருக்கும் இடங்களில் தேனீக்களை வளர்த்தால் நாள் ஒன்றிற்கு 5 லிட்டர் அளவிற்கான தேன்களை தேனீக்கள் சேகரிக்கின்றன.இது நல்ல லாபகரமான தொழில்.
ஆனால், இதற்கான முதலீடு அதிகம். எனவே இத்தொழில் செய்வதற்கு அரசால் வழங்கப்படும் கடனுதவி மற்றும் மானியங்கள் கிடைப்பதில் உள்ள கடினமான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தேன்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆரோக்கியத்தில் தேனின் பங்கு என்ன...? வாருங்கள் அறிந்துகொள்வோம்...