திண்டுக்கல்: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென்று சில மூத்த அமைச்சர்களும், சில அமைச்சர்கள் உதயநிதியைத் துணை முதலமைச்சராக வேண்டுமென்று தொடர்ந்து தீவிரமாகப் பேசி வரும் நிலையில் திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி (கூட்டுறவு அமைச்சர்) ஐபியின் மகன் குரல் அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இன்னும் இரண்டு தலைமுறைக்கு..
திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி செந்தில்குமார் வத்தலக்குண்டு மதுரை ரோட்டில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி.3) கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் தற்போது சிறப்பான ஆட்சி நடைபெறுகின்றது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறாரா எனப் பலர் கேட்டனர்.
அவருக்கு அந்த தகுதி முழுமையாக உள்ளது. சில பத்திரிகைகள் வேறுமாதிரியான செய்திகளாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், தலைவனாக முழு தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. இந்த இயக்கம் இன்னும் இரண்டு தலைமுறைக்கு வலிமையாக இருக்கும். இந்த இயக்கத்தின் தலைவர்கள் வாழையடி வாழையாக மக்கள் பணியில் இருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.
மூத்த தலைவர் கோரிக்கை
அமைச்சர்களில் உதயநிதி நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என் நேரு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் உதயநிதியை அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ நியமனம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
இதனிடையே (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்.
அவர் பேசும் பொது, "உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் எனச் சட்டப்பேரவையில் கூறியது நான் தான் எனத் தெரிவித்த அவர், அவரின் ஆர்வம், மக்கள் பணி பார்த்து ஆசையை வெளிப்படுத்தியதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்," எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் பதவியில் ஆசை இல்லை
சமீபத்தில் கோவையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நான் அமைச்சர், துணை முதலமைச்சர், மேலும் முதலமைச்சர் பொறுப்பிற்கு ஆசைப்படாதவன் என்றும் தனக்கு அமைச்சர் பதவியில் ஆசை இல்லை" என்று கூறினார்.
திண்டுக்கல் நிகழ்ச்சியால் மக்களவை உறுப்பினர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் மணிமுருகன், வத்தலக்குண்டு பேருா் கழக செயலாளர் சின்த்துரை, ஒன்றிய செயலாளர் கேபி முருகன், பேரூர் துணைச்செயலாளர் அமுதவேல், பொருளாளர் சோடா குமரவேல், பத்திர எழுத்தர் சங்கத் தலைவர் சிதம்பரம், இளைஞரணி தெற்கு தெரு ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உதயநிதியை அமைச்சராக்க திமுகவில் வலுக்கும் ஆதரவு - பின்னணி என்ன?
திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை: 'தமிழகமே உதயநிதியை கொண்டாடும் நாள் வரும்' - அமைச்சர் மகேஷ்