திண்டுக்கல்: கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் சூரியனைக் காண்பதற்காக, பிரத்தியேக தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய வான் இயற்பியல் ஆய்வக இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இரண்டு வாரங்களில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருந்து, கொரோனா கிராப் தரவுகள், இஸ்ரோவிற்கு கிடைக்கப்பெறும் எனத் தகவல் அளித்தார். கடந்த 20 ஆண்டுகளில், இந்திய விண்வெளித் துறை, பல சாதனைகள் புரிந்து உள்ளதாகவும், பெருமிதம் கூறினார்.
உதாரணமாகச் சந்திரயான், ஆதித்யா போன்ற விண்கலங்களை, வெற்றிகரமாக இந்திய விண்வெளித்துறை ஏவி, சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டில், காவலூரில் புதிய வான் இயற்பியல் ஆய்வகம் அமைத்துள்ளதாகவும், லடாக் பகுதியில், புதிய வான் இயற்பியல் ஆய்வகம், அமைக்க உள்ளதாகவும் கூறிய அவர், 60 மீட்டர் அகலமுள்ள கண்ணாடியில், புதிய பிரம்மாண்ட தொலைநோக்கியை, இந்திய வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருவதாகவும் தகவல் அளித்தார்.
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் புதிய கோளரங்கம் அமைக்கக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கோளரங்கம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.