திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு என்று தனிச்சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சந்தை செயல்படும். திருப்பூர், தாராபுரம், கோயமுத்தூர், திருச்சி, மணப்பாறை, பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற வெளிமாவட்டங்களில் விளைவிக்கக்கூடிய சின்ன வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்காக திண்டுக்கல்லுக்கு கொண்டுவருவது வழக்கம்.
இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் இன்று பாதியளவு வெங்காயம்கூட வரவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.
மேலும், தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக விவசாயம் செய்யப்பட்ட வெங்காயம் விளைச்சல் இல்லாமல் அழுகிவிட்டது. இங்கு மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் வரத்து குறைவின் காரணமாக விலை ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
ஒருபக்கம் தங்கம் விலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில் தற்போது வெங்காயத்தின் விலையேற்றம் குடும்பங்களை ஆட்டிப்படைத்துவருவதாக நெட்டிசன்கள் நையாண்டி அடித்துவருகின்றனர்.