திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாசில் விருப்பாட்சியைச் சேர்ந்த உமாரமணன் என்பவர் எலக்ட்ரிகல் பவர் டூல்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் வந்த திருடர்கள் கடையின் முன்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை திருப்பிவிட்டு கடையின் ஷட்டரை இரும்பு கம்பியின் மூலம் உடைத்து திறந்துள்ளனர். இதையடுத்து அதற்குள் சென்ற திருடர்கள் கடையினுள் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் கட்டிங் மிஷின், ட்ரில்லிங் மிஷின்களை திருடிச் சென்றனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை அக்கடைக்கு அருகில் இருக்கும் இறைச்சி கடைக்காரர்கள் பார்க்கும் போது கடையின் ஷட்டர் உடைந்திருப்பதைக் கண்டு உடனே கடை உரிமையாளர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் மோப்பநாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை கைப்பற்றிக்கொண்டு பின் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.