பழனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பழனி தொகுதி வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார், ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் வேட்பாளர் சக்கரபாணி, திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி, வேடசந்தூர் வேட்பாளர் காந்திராஜன், நத்தம் வேட்பாளர் ஆண்டி அம்பலம், நிலக்கோட்டை வேட்பாளர் முருகவேல் ராஜன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது, “இங்குள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று ஒத்துக்கொண்டவர். மற்றபடி அவரால் இம்மாவட்டத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது. குடிமராமத்து பணியில் பணத்தை கொள்ளையடித்துதான் மிச்சம். எனவே திண்டுக்கல் சீனிவாசனை ஏப்ரல் 6ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிமுகவினர் வெற்றி பெற்றால் அதிமுகவினராக இருக்கமாட்டார்கள், பாஜகவினராக தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். எனவே அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு வேலை செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ, அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். பிரதமர் என்பவர் உண்மையை தெரிந்து பேச வேண்டும். எழுதிக் கொடுத்ததை எல்லாம் பேசினால் அவர் பிரதமர் கிடையாது.
திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற மோடிக்கு பொள்ளாச்சி பெண்கள் பாலியல் விவகாரம் பற்றி தெரியாதா? காவல்துறையிலேயே பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் ஒரு டிஜிபி. ஆனால், இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் பழனிசாமிக்கு மோடி ஆதரவு அளிக்கிறார். கமிஷன், கரப்சன், கலெக்சன் ஆட்சியாளர்களை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பதாக மோடி கூறுகிறார்.
கடந்த அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் புதியதாக காதில் பூ சுற்றி வருகின்றனர். மக்களுக்கு எதுவும் செய்யாத இருவரும் தேர்தலில் தோற்று வீட்டிற்கு போக வேண்டும் அல்லது செய்த ஊழலுக்காக ஜெயிலுக்கு போக வேண்டும். ஆகவே, வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடித்து, எதிர்க்கட்சி வரிசையில் கூட உட்கார முடியாமல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்