திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக் கட்சி வேட்பாளர் சரண்ராஜை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஊழல் செய்து வருவதாக குறை கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையத்திடமே சொத்து மதிப்பில் பொய் கூறும் இவர்கள் எப்படி மக்களிடம் உண்மையாக இருப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கார் இல்லை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விவசாய நிலம் இல்லை என்று சொல்கிறார். ஆனால், நாம் கூட்டணி வைத்திருக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உழைத்து வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை மறைக்காமல் ரூ.170 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.
எனவே மக்கள் மீது அக்கறை உள்ள மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு உங்களது வாக்குகளை பதிவு செய்து மாற்று அரசியலுக்கு வழிகாட்டுங்கள்" என்றார்.