திண்டுக்கல்: சோலைஹால் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 19) நடந்தது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஒரு லட்சத்து 25 ஆயிரம் சிலைகள்
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, "விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைக்கவுள்ளோம்.
கடந்த கரோனா காலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லாததால், விநாயகர் சிலை செய்பவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது நக்சலைட் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. ஒரு நக்சலைட் ஸ்டேன் சாமி என்பவர் இறப்புக்கு அரசு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மரியாதை செய்யப்பட்டது.
கொங்கு நாடு - உடன்பாடில்லை
இது வன்மையாகக் கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் வங்கதேச நக்சல்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். நக்சல்களையும், இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் தமிழ்நாட்டில் உளவுத் துறை கண்காணிக்க வேண்டும். தற்போது நக்சல்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளன.
கொங்கு நாடு விஷயத்தில் இந்து முன்னணிக்கு உடன்பாடு இல்லை. தமிழ்நாடு ஒற்றுமையாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். கரோனா காலம் என்பதால் விநாயகர் சிலைகளைச் செய்யவில்லை. தற்போது படிப்படியாகச் செய்ய தொடங்கிவிட்டனர்.
ஒருவேளை கரோனா தொற்று அதிகமானால் விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடக்கும். ஆனால் பொது நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து, பின்னர் ஆலோசணை செய்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: '‘இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்’- கே.எஸ். அழகிரி'