சென்னை: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலத்தூர் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு, பினாமிகள் மூலம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டது குறித்து கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த 2010-2013 ஆம் ஆண்டுகளில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவருக்கு, பினாமிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இதனால் அப்போதைய மாவட்ட ஆட்சியர், அப்போதைய தாசில்தாரர், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் வரை கூட்டு சேர்ந்து எனக்கு எதிராக 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர், எனது குடும்பத்தினரையும் துன்புறுத்தினர்.
அதே நேரத்தில் ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த சிபிசிஐடி விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த முறைகேடு தொடர்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், லஞ்ச ஒழிப்பு ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளை; மாசுகட்டுப்பாட்டு வாரியம் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை..!