திண்டுக்கல்: நத்தம் ஒன்றியத்தில் வத்திபட்டி, பரளி, சிறுகுடி, செந்துறை, குட்டுபட்டி, புதுப்பட்டி, புன்னப்பட்டி, வேலம்பட்டி, வேலாயுதம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதியில் விளையும் கொய்யா சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கரோனா தொற்றுப் பரவல், மா விளைச்சல் காரணமாக கொய்யாப் பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கொய்யா அறுவடை உச்சத்தை அடையும்.
கடந்த ஆண்டு விலை நிலவரம்
இந்தாண்டு மகசூல் நன்றாக உள்ளபோதும் கொள்முதல்செய்ய வியாபாரிகள் முன்வராததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ கொய்யா பழங்கள் ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், 25 கிலோ ரூ.800-க்கும் அதிகமாகவும் விலைபோயின. விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜை விழா நாள்களில் இருமடங்கு வரை விலைபோனது.
இந்தாண்டு விலை நிலவரம்
தற்போது, 10 கிலோ ரூ.95-க்கும், 25 கிலோ ரூ.200-க்கும் விலைபோகிறது. கொய்யா சாகுபடிக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவுசெய்துள்ளனர்.
எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் பழங்களை கொள்முதல்செய்து உரிய விலை கிடைக்கவும், பண்ருட்டி வட்டத்தில் கொய்யா பழக்கூழ், பழரசம் தயாரிப்பு ஆலை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இதையும் படிங்க: வழிப்பாதை தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி கைது