திண்டுக்கல்: மேற்கு மரிய நாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் வயது (26). இவர் அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளார். நேற்று (ஜனவரி 3) நள்ளிரவில் குளக்கரையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராகேஷ் உடன் தகராறு செய்துள்ளது. அந்த கும்பலில் இருந்த நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ராகேஷை சரமாரியாக சுட்டதில் வலது மார்பில் குண்டு பாய்ந்தது.
உயிரிழப்பு
இதில் படுகாயமடைந்த ராகேஷை உடன் இருந்த நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ஆறு இடங்களில் குண்டு துளைத்ததில் ராகேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி மற்றும் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
தனிப்படை அமைப்பு
இக்கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏ.டி.எஸ்.பி.அருண் கபிலன் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கொண்ட 5 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் செட்டிகுளத்தில் மீன் குத்தகை எடுப்பதில் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,594 பேருக்குக் கரோனா பாதிப்பு