அரசு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அரசு அலுவலர்கள் மீண்டும் சிறு வயதிற்கு திரும்பி சென்ற உணர்வு ஏற்பட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
2019 - 20ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். போட்டிகளில் ஆண்கள் 124 பேர், பெண்கள் 85 பேர் என மொத்தம் 209 பேர் பங்கேற்று போட்டியிட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக ரோஸ் பாத்திமா மேரி முன்னிலையில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, கபடி, மேஜைபந்து, டென்னிஸ் மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்ட அளவிலான இப்போட்டியில் தனிநபர் போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர்கள், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்து நடைபெறஉள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவார்கள்.
வெற்றி பெற்ற அரசு அலுவலர் சாந்தி கூறுகையில், 'இது போன்ற போட்டியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட கால இடைவெளிக்கு பின் விளையாடியது சிறுவயதிற்கு சென்றது போல உணர்கிறேன். இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றால் எங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும்' என்று கூறினார்.