ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் பல வகைகளில் தங்களுக்கான மதுபானங்களைத் தேடிவருகின்றனர். அதனைச் சில சமூகவிரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கொடைக்கானலில், யூ-ட்யூபை பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி அலத்துரை கிராமத்தில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் பாண்டி, வல்லரசு, விரும்பாண்டி ஆகிய நான்கு பேரும் இணைந்து யூ-ட்யூபை பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கொடைக்கானல் சார்பு ஆய்வாளர் தலைமையில், காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துசென்று, கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அதன்பின்னர் காவல் துறையினர் அவர்களிடமிருந்து, கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய குக்கர், டியூப், மூலப்பொருள்களைப் பறிமுதல்செய்து அவர்களைக் கைதுசெய்தனர். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரித்த வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய அதிமுக பிரமுகர் - வழக்குப்பதிவு செய்த காவல் துறை!